Monthly Archives: October 2014

நாலடியார் கூறும் நன்னெறி!

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க – வான்கவிந்த வையக மெல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல். 80 தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவா¢டத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக! Advertisements

86. குடியால் உண்டாகுந் தீங்கு!

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர் தெளிவுடைய ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும் கட்டுரையால் கோதப் படுமேல் இவையெல்லாம் விட்டொழியும் வேறாய் விரைந்து. “கட்குடியன்” என்னும் பொருள்சேர் பழிச்சொல்லால்,ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால்,எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும்,அம் மதிப்பினுக்கேற்ற செயலும்,பெரியோர் பலரும் “இவர் தெளிந்த அறிவினையுடையவர்” என்று கூறும் புகழும் ஆகிய இவை யெல்லாம் வேறுபட்டு விரைவில் அவனை விட்டு நீங்கும்.

இன்தமிழ் குறளோவியம்!

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.குறள்:245 அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

நாலடியார் கூறும் நன்னெறி!

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க – இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட! பழியாகா ஆறே தலை. 79 இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும்.

85. புறங்கூறாமையின் உயர்வு!

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத் தன்மேற் படாமைத் தவிர்ப்பானும்-மெய்ம்மேல் பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே தணிக்கு மருந்து தலை. புறங்கூறலாகிய தீமை தன்கண் நிகழாமல் காப்பவன்,பொய்யை மேற்கொள்ளாத நாவையும்,மெய் பேசுதலில் பிணிப்புண்டிருக்கும் பண்புடைமை நீங்காமையையும் பெற்ற அப்போதே, பிறவிப் பிணி தணிக்குந் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

இன்தமிழ் குறளோவியம்!

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.குறள்:244 எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

நாலடியார் கூறும் நன்னெறி!

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க – அற்றம் மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார். 78 உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவரிடம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவரிடம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர்.