Monthly Archives: November 2014

நாலடியார் கூறும் நன்னெறி!

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும் பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். 108 காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே). Advertisements

114. உலகவாழ்க்கை உறுதியன்று!

மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை அறிந்தொருவன் வாழுமேல் இல்லை–செறிந்தொருவன் ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே கூற்றம் இடைகொடுத்த நாள். ஒருவன் தனது ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கை, இவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும். ஒருவன் மிகவும் பற்றைவிட்டு ஞானத்தையடையானாயின்,அவன் கூற்றினிடம் அகப்படும் ஞான்று அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.

இன்தமிழ் குறளோவியம்!

கூடாவொழுக்கம்வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்.குறள்:272 தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?

113. உடலின் நிலையாமை!

ஆசையும் பாசமும் அன்வும் அகத்தடக்கி பூசிப் பொதிந்த புலாலுடம்பு-ஊசல் கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத் தெயிறுற் றிடைமுரிந்தக் கால். பொருள்கள்மேல் வேட்கையையும். உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே அடக்கி, தசையால் கட்டிய புலால் நாற்றம் வீசும் உடம்பானது,எமனது பல்லில் சிக்கி அழிந்தவிடத்து, கயிறற்றவிடத்து ஊஞ்சலே போல அது செயலற்று வீழ்ந்து கிடக்கும்.

இன்தமிழ் குறளோவியம்!

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.குறள்:271 ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி {ஆகாயம்) எனப்படும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் – கல்லாதார் சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாம் கூற்று. 106 பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் ‘சாறு’ கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் ‘சக்கை’ என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

112. உணவொடுங்கினால் உயிரொடுங்கும்!

இறையிறை யின்சந்தித் தென்பொடூன் சார்த்தி முறையின் நரம்பெங்கும் யாத்து-நிறைய அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன் புகாச்சுருக்கில் பூட்டா விடும். உறுப்புக்களின் மூட்டு வாய்களை ஒன்றோடொன்று பொருத்தி,எலும்போடு தசையை இணைத்து,முறையே நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி,ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை, ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன்,ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச் செலுத்துதலைவிட்டு நீக்குவான்.