Monthly Archives: December 2014

இன்தமிழ் குறளோவியம்!

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.குறள்:297 ஒருவர் பொய்சொல்வதே இல்லையென வாழ்ந்தால் மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும்.

புத்தாண்டே! புனித ஆண்டாய் வருக!

புத்தாண்டே! புனித ஆண்டாய் வருக! பூவுலக மனிதர் புனிதராய் ஆகுக! அன்புமலர்கள் மனித உள்ளங்களில் மலர்க! துன்ப துயரங்கள் இல்லா தொழிக! சமத்துவம் ஓங்கி சாதீயம் மடிந்தழிக! தீவிரவாதம் தீயினில் வீழ்ந் தொழிக! வாழ்த்தியே புத்தாண்டே வரவேற்கிறோம் யாமுனை! வருக!வருகவே! நலம் எமக்கருள்கவே!

நாலடியார் கூறும் நன்னெறி! வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை; மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்; எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற. 134 வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் ‘செல்வம்’ எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!

138. பேராசையினை அடக்கலே பிறரை யடக்கலாம்!

ஒறுக்கிலேன் ஊர்பசை என் கண் பிறரை ஒறுக்கிற்பேன் என்றுரைப்பை யாகில்-கறுத்தெறிந்த கற்கறித்துக் கற்கொண் டெறிந்தாரைக் காய்கல்லாப் பற்கழல்நாய் அன்ன துடைத்து. நெஞ்சே!என்னை ஊர்ந்து செலுத்துகின்ற அவாவினையடக்கேன்; நான் கருதிய பொருளையடைதற்கு இடையூறு செய்கின்றவர்களை அடக்குவேன் என்று நீ சொல்வாயாயின், கல்லால் தன்னை எறிந்தவர்களை வெகுண்டு கடியாமல்,அவர்களால் வெகுண்டு எறியப்பட்ட கல்லைக் கடித்துப் பல்லை இழக்கின்ற நாயினது செயலை ஒக்கும் உனது செயல்.

இன்தமிழ் குறளோவியம்!

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். குறள்:296 ஒருவனுக்குப் பொய்பேசாதிருத்தலைப் போல் புகழுடையது வேறு ஏதும் இல்லை. அதுபோல் பிறரை ஏமாற்றாத தன்மை அவனுக்கு எல்லா நன்மையையும் தரும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும். 133 களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.

இன்தமிழ் குறளோவியம்!

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை.குறள்:295 ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.