Monthly Archives: May 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரிற் புணருமாம் இன்பம் – புணரின் தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். 247 நாம் ஒன்றை மனத்தில் நினைக்க, அதனைக் குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் மிகும். அப்படியின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்த போதும் அவற்றை உணராத அறிவிலாரை நண்பராகக் கொள்வோமானால், அவர்களால் உண்டாகும் துன்பம், அவர்களை விட்டுப் பிரிய, தானே நீங்கும். Advertisements

இன்தமிழ் குறளோவியம்!

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.குறள்:413 குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

நாலடியார் கூறும் நன்னெறி!

பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று. 246 பருத்த அடி மரத்தினையுடைய புன்னை மரங்களால் பொலிவு பெற்ற குளிர்ந்த கடற்கரையையுடைய மன்னனே! நிலையான மனம் உடையவர்கள் இனிய செய்கையுடை யாரிடத்தும் நீங்குதலும் பின் சேர்தலும் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். இப்படிச் சேர்ந்து நீங்குதலை விட முதலிலேயே நட்புச் செய்யாதிருத்தல் நல்லது.

இன்தமிழ் குறளோவியம்!

செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.குறள்:412 செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

நாலடியார் கூறும் நன்னெறி! கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும் உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம் இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப! மனத்தனையர் மக்கள்என் பார். 245 அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும். ஆதலால் மக்கள் தாம் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர்; தம் தம் மன இயல்பை ஒத்தவராவர்.

இன்தமிழ் குறளோவியம்!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.குறள்:411 செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது. 244 வேம்பின் இலைகளிடையே வாழை பழுத்தாலும் அதன் இனிய சுவை சிறிதும் வேறுபடாது. அதுபோல, பண்புடையார் சேர்ந்த இனம் தீதாயினும் அதனால் அவர்கள் மனம் தீயதாகும் தன்மை இல்லை.