Monthly Archives: March 2016

இனியவை நாற்பது!

  ஆற்றானை, ‘ஆற்று’ என்று அலையாமை முன் இனிதே; கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே; ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28 ஆற்றானை – செய்யமாட்டாதவனை கூற்றம் – எமன் ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

மழையே! மழையே! வருவாய்! வருவாய்! மண்மீது உன் பண் பாடி!

மழையே! மழையே! வருவாய்! வருவாய்! மண்மீது உன் பண் பாடி! மரங்கள் தளிர்த்திட அணைகள் நிரம்பிட குளங்கள் பெருகிட குவலயம் மகிழ்ந்திட மழையே! மழையே! வருவாய்! வருவாய்! மண்மீது உன் பண் பாடி! அகிலம் வாழ்வது உன்னாலே! ஆழ்கடல் துள்ளுதல் உன்னாலே! பயிர்கள் விளைவதும் பாமரர் வாழ்வதும் உயிர்கள் நிலைப்பதும் உறவுகள் தழைப்பதும் மழையே!மழையே! உன்னாலே! இந்த மண்ணே நிலைப்பது உன் அருளாலே! அதனால் மழையே! மழையே! வருவாய்! வருவாய்! மண்மீது உன் பண் பாடி!

வாழுங்கள் மானிடராய்! வாழ்த்திடும் வையகம்!

வாழுங்கள் மானிடராய்! வாழ்த்திடும் வையகம்! சாதீயம் பேசுவோர் சாதிக்கப் பிறந்தவரா? சாதிக்காகப் பிறந்தவரா? பாதியில் வந்த சாதியினைப் பற்றிக்கொண்டு பண்பற்ற பதாரிகளாய் நாளும் வாழ்ந்து பெரியோர் சிறியோர் பேதமின்றி நித்தம் தேளாய்க் கொட்டி விசத்தினை விற்றிடும் வித்தகரே சாதியில் உயர்ந்ததால் உமக்கு சாவே வந்திடாதோ? வாழப்பிறந்த பிறவிதனை நலமாய் வாழ்வதை விடுத்துக் கொல்வேன் குலைப்பேனெனக் கொக்கரித்துத் திரிவதேன்! வாழுங்கள் மானிடராய்! வாழ்த்திடும் வையகம்!

இன்தமிழ் குறளோவியம்!

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.குறள்:609 தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

இனியவை நாற்பது!

  தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே; மானம் பட வரின் வாழாமை முன் இனிதே; ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை கோள் முறையால் கோடல் இனிது. 27 ஆண்மை – பெருமை அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

சாதீய நச்சினை விதைத்திடும் நீங்கள் உயர்ந்தவர்களா?

நாங்களே உயர்ந்தவர்களென நாளும் உரத்தப்பேசும் நல்லோரே தாங்கள் எதிலெல்லாம் உயர்ந்தவர்களென எண்ணிப் பார்த்தீர்களா? அறிவால், ஆய்ந்தறியும் புரிவால், அன்பின் பரிவால், அடுத்தவரை மதிக்கும் அன்புயர்வால், ஈதலால், ஏழைக்கு இரங்கிடும் இன்னுணர்வினால், பகையை நட்பாக்கி பரிவோடுதவிடும் பண்பதால், கொடையால், கோனும் கொண்டாடும் குன்றா கல்வியதால் நீவிர் எதில் உயர்ந்தவர்கள்? சொன்னால் உங்களை உலகே உச்சத்திலேற்றி உமைக் கொண்டாடிடுமே! அதை விடுத்து நாங்கள் உயர்ந்தவர்களென நாளும் சொல்லிக்கொண்டு சாதீய நச்சினை விதைத்திடும் நீங்கள் உயர்ந்தவர்களா? ஒருபோதும் உயர்ந்தவர்களாய் மாறீர் நீங்கள்!

இன்தமிழ் குறளோவியம்!

  மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.குறள்:608 பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.