இதயத்தில் கனக்கிறாள்!

இதயத்தில் கனக்கிறாள் என்னவள்
இருந்தும் இதமாகத்தான் இருக்கிறது!
எத்தனைமுறை சொல்வது சத்தியத்தை?
உத்தமன் நானென்று ஓயாமல்
உரைத்து விட்டேன். ஏனோ
உணர்ந்திட மறுக்கிறாள்!
சந்தேகம் உள்ளத்தில் குடிகொண்டால்
சாமியே சொன்னாலும் நம்பமாட்டாள்!
எப்படி இதனை மெய்ப்பிப்பேன்?
இருக்கவே செய்கிறது உண்ணா
நோன்பொன்று!
நானின்று சாப்பிட அடம்பிடத்தால்
தானாய் வழிக்கு வந்திடுவாள்!
என்று உறுதி நானேற்று
எரித்திடும் பசியையும் உள்ளடக்கி
பொறுத்திடு பசியே பொறுத்திடுவாய்
என்றே அமர்ந்தேன் தனிமையிலே!
உணவினைத் தட்டினில் தானேந்தி
ஓரத்தில் அமர்ந்திட்ட என்னிடத்தில்
டக்கென அருகினில் வைத்து
சாப்பிடச் சொன்னாள் மெதுவாக!
எதுவும் வேண்டாம் எனக்கின்று!
எடுத்துச் செல்வாய் உடனேநீ!
பொய்க்கோபங் கொண்டு நானுரைக்க,
மெல்ல அருகில் தொட்டென்னை
கோபம் என் மேல் தானே?
சாப்பிட என்ன வீராப்பு?
என்றே சொல்லி உணவினையே
எடுத்தே வாயில் ஊட்டினளே!
கண்களெனக்கு கண்ணீரைத் தார்வார்க்க
கலங்கித் துடைத்தாள் சேலையதால்!
வேண்டாம்!வேண்டாம் நான்சொல்ல
விடாது உணவினை ஊட்டினளே!
தாயினும் சாலப் பரிந்தென்னை நாளும்
தாங்கிப் பாதுகாக்கும் இவளன்பில்
இதயம் நிறைந்து கனத்தாலும் இது
இன்சுகங்தான் அதை மறவேனே!

Leave a comment