உலகம் ஒருநாள் ஒட்டுமொத்தமாய் அழியும் இது திண்ணம்!

காதலா? காமமா? இவளுக்கு!
யாரும் உணரமுடியா அலங்கோலப்
பிறவி இவள்!
கன்னிப் பருவமதில் மையல்
கொண்டாள் ஆடவ னொருவனை!
அங்கீகாரம் பெற்றோரிடம் கிட்டாததால்
அவன் நினைவகற்றி ஏற்றிட்டாள்
மணவாளாய் எழிலான ஒருவனை!
ஓடியது சிலகாலம் அவளுக்கு
ஓய்விலா தின்பத்தால்!
முத்தான குழந்தைகள் மூன்று
பெற்றதால் உற்றாள் பேரின்பம்!
தாம்பத்யம் சலித்ததோ? மணாளன்
தரும் சுகம் குறைந்ததோ?
தேடினாள் தாம்பத்ய உறவிற்கு
திறன்மிகு இளைஞ னொருவனை!
சில காலம் மகிழ்ந்திருக்க
சீயென ஒதுக்கினாள் அவனையுமே!
விடலை யொருவன் கிடைத்திட
விடாது பற்றிக் கொண்டாள்!
கணவன் கண்ணெதிரே அவள்
காதல் களியாட்டங் கொண்டாள்!
கண்டித்தால் உன்னோடு உன்
குழந்தைகளையும் கொல்வேனென மிரட்டினர்
இருவருமே மிரண்டிட்டான் பேதையவன்!
வழியறியாது சோகமுடன் வாழ்ந்து
வந்தான் கணவனுமே!
விடலையும் சக்தி இழந்தானோ?
வேறு என்ன நடந்ததுவோ?
கத்தரித்தாள் அவன் தொடர்பை
கதிகலங்கிப் போனான் கள்வனவன்!
இவளே தன் மனைவியென
இறுமாப்புடன் திரிந்தவனுக்கு
இவள் செய்கை இடியானது
என் செய்வதென குழப்பம்
உருவானது! ஓடினான் அவளிடம்
உளந் திறந்து காட்டென்றான்
உனையன்றி எவள் நினைவும்
எனை வந்து சேர்ந்ததில்லை!
நீயே என் துணைவியென
நித்தம் நான் வாழ்ந்தேனே!
துரோகம் செய்த உனைத்
தொலைத்து என் கதைமுடிப்பேன்
பொங்கி யெழுந்த அவனிடத்தில்
போடா நீ தாலிகட்டிய
மனைவியல்ல நான்! விலகிவிடு
எனைவிட்டு இல்லை விபரீதம்
உனக்குத்தான்! உரைத்திட்ட உரை
கேட்டு ஒருநொடி அதிர்ந்திட்டான்!

என் பெற்றோர் என்னுறவினர்!
எல்லோரையும் நான் மறந்து
உனை நினைந்து
தவங் கிடந்தேன் ஒதுக்கிவிட்டாய்
என்னுறவை! உனை மாய்த்து
எனை யழிப்பேனென வெறிகொண்டான்
அழித்திட வீறுகொண்டவேங்கையாய்!
ஒளிந்து  கொண்டாள் அவளதனால்
உளம் நொந்தான் உயிர்
துறக்க உளங் கொண்டான்!
கட்டிய வேட்டிதனைக் களைந்தெடுத்து
கடிந்து மரமேறி கழுத்தினிலே
முடிச்சிட்டுக் குதித்திட்டான் கீழாகக்
குலைந்துயிரும் போனதுவே!
துடிததிட்டார் பெற்றோரும் துணை
நிற்கும் உற்றாரும்!
சேதி தெரிந்தக் காவலரும்
வாதிட்டு குற்றப் பதிவுசெய்து
உடலாய்வுக்குப் பின்னாலே
ஒப்படைத்தார் இறந்த உடலதுவை!
தவமிருந்து பெற்றாலும் தன்னிடத்தில்
வையாரே உயிரது நீங்கிய
உடலதுவை தன்னிடத்தில்!
சான்றிதழ் தான்பெற்று தக்கவாறு
எரியூட்டி சாம்பலதனை நதிசேர்த்து
திரும்பினரே வீடுனோக்கி!
இழவுக்கு வந்தவள் அறுப்பளோ
தாலி என்றும்? இவனில்லை
வேறொருவன் நமக்குத் துணை
என்றெண்ணி வாழுகிறாள் என்றும்போல்
இனிதே உரையாடி மகிழ்வுறுகிறாள்!
சற்றும் வருத்தம் அவளுக்கில்லை
தப்பென வெட்கம் கொளவில்லை!
இவள் போன்ற இழிதகையோர்க்கு
உள்ளது காதலா? இல்லை
கள்ளுறவு கொடிகாமமா அறிவீரோ?
கற்பிற் சிறந்த கண்ணகி
வாழ்ந்த புவியிது!
கணவன் உயிர் மீட்க
காலனோடு போரிட்டு வென்றிட்ட
நளாயினி போன்றோர் வாழ்ந்த
நல் மண்ணிது!
கணவனே கண்கண்ட தெய்வமாய்
ஏனென்று கேட்கா திட்டப்
பணிசெய்த வாசுகி வாசம்
செய்த வடிவான நிலமது!
இந்நிலம் இப்போது இழிகொண்ட
நங்கையரால் தலைகுலைந்து நாணமுற்று
தடுமாறித் தவிக்கிறது!
நாகரீகப் போக்கதுவால் தனை
நாளும் சீரழிக்கிறது!
கற்பு, மானமெல்லாம் மங்கி
பொய்மை,புறங்கூறலெல்லாம் மலிந்து
மனம்போல் ஆட்டம் போடுகிறது!
என்நாடே! ஏனிந்த இழிநிலை?
பொன்னான என்தாயகம் புழுவரித்துப்
போனது யார்செய்த குற்றமிது?
மேனாட்டு மோகமா? இல்லை
நாகரீகத்தின் சாபமா?
ஆணுக்குப் பெண் இழப்பிலை
காணென்று கும்மியடி என்ற
கூற்று இதை யெண்ணியா?
கற்றதனாலாய பயனென் கொல்
வாலறிவன்(கணவன்) நற்றாள்
தொழா (பற்றில்லா) நங்கையரே!
பெய்யும் மழை பெய்யா
தொழிந்ததும் இவர் போன்ற
இழி தகையோராலே!
நல்லொழுக்கம் குறைந்து இழி
தீயொழுக்கம் மிகுங்கால் இவ்
உலகம் ஒருநாள் ஒட்டுமொத்தமாய்
அழியும் இது திண்ணம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: