Monthly Archives: February 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் – நெறியறிந்த நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171 அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு கூடி நெறியல்லாதன செய்தமையால் நேர்ந்த பாவங்களும், நல்லாரைச் சார்ந்து ஒழுகலால், வெயில் மிகுந்தோறும் புல்லின்மேல் படிந்த பனிநீர் அதனை விட்டு நீங்குதல் போலக் கெடும்.

181. தன்னைப் போற்றுவதும் தனிப்பெரும் ஈகையே!

சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன்மற்(று) ஈரப் படினும் அதுவூரான்–ஆரக் கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால் முடிக்கும் கருமம் பல. உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன், மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான்.அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல இருப்பதால்,அவ்வுடலைத் தொழிற்படுத்தற்கேற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

இன்தமிழ் குறளோவியம்!

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.குறள்:340 உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

தமிழகமே நீ தலைநமிர்ந்து சொல் நீ நலம்தானா?

சாதி இரண்டொழிய வேறில்லை! ஏட்டளவில் மட்டுமே! எங்கும் சாதிவெறி! எதற்கும் வெட்டுக்குத்து! தனிமையிலென்ன துணையுடன் சென்றாலும் செயினறுப்பு வழிப்பறி, கொலைகொள்ளை! இருந்தாலும் எம்தமிழகம் அமைதிப் பூங்கா! தமிழகமே நீ தலைநமிர்ந்து சொல் நீ நலம்தானா?

பிறவிப் பயனை அடைந்து இன்புறுவோம் நாம்!

ஓடுகின்ற நதிபோன்றதே நம்வாழ்க்கை! ஒழுங்காய் பயணித்திட தேவை ஒரு நன்படகு! எந்த ஒரு கரையும் நம்பயணத்தை தடுத்திடாது கவனித்துப் படகினை செலுத்துவோமெனில் பிறவிப் பயனை அடைந்து இன்புறுவோம் நாம்!

நாலடியார் கூறும் நன்னெறி!

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு உரியார் உரிமை அடக்கம் -தெரியுங்கால் செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப எனின். 170 பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடைமையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும் செல்வரே ஆவர்.

180. தானஞ் செய்வார்க்கு வானம் வழி திறக்கும்!

ஒன்றாக நல்ல(து) உயிரோம்பல் ஆங்கதன்பின் நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல்–என்றிரண்டும் குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம் நின்றது வாயில் திறந்து. அறங்களுள் தன்னோடொப்ப தின்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல். அதனையடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல்.இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி யடைந்தவனை,வருக என்று கூறி, தனது வாயிலைத் திறந்து, அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

இன்தமிழ் குறளோவியம்!

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.குறள்:339 விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

நாலடியார் கூறும் நன்னெறி!

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும்; – ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின் படாஅவாம் பண்புடையார் கண். 169 கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பெரியோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம்.

179. செல்வர்கள் செய்ய வேண்டுவன!

செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு–நல்லவாம் தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார் வானகத்து வைப்பதோர் வைப்பு. பொருளையடைந்தவர்கள்,வெகுளியினீங்கி,காண்டற்குஎளியராய், சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாவண்ணம்,அவர்கட்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு,இம்மை வறுமைப் பயன்களை யடைவிக்கின்ற,அறத்தினையும் மறவாது செய்யுந்தன்மையராயின்,அத்தன்மையை மேலுலகத்தில் தமக்கு உதவுமாறு வைக்கின்ற ஒப்பற்ற சேமநிதி என்று பெரியோர் கூறுவர்.