Monthly Archives: March 2015

நாலடியார் கூறும் நன்னெறி!

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். 201 கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அது பற்றி வரும் பல துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் நோவும், ஆகிய இத்தகைய துன்பங்களையெல்லாம் மடியில் இருக்கும் குழந்தையைக் கண்டு தாய் மறப்பதுபோல், தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும்

211. உலகோரால் தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம்!

ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும் தேற்றா னெனப்பட்டு வாழ்தலின்-மாற்றி மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில் நனையில் உடம்பிடுதல் நன்று. துன்பங்கள் மிக அறிவில்லாமல் தன்னுயிர்க்காவதோர் உறுதி ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும்,இல்வாழ்க்கையைவிட்டு மனையினகன்று,விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று இனிமைபயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.

இன்தமிழ் குறளோவியம்!

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.குறள்:369 பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர்; – கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும். 200 முயற்சியற்ற கீழ்மக்கள் பெருமுத்தரையர் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற செல்வர் மகிழ்ந்து தரும் கறிகளோடு கூடிய உணவை உண்டு மகிழ்வர். கறியின் பேரையும் அறியாத மேலோர் தாம் மிகவும் விரும்பிச் செய்த முயற்சியால் வந்தது நீர் உணவாயினும் அதனை அமிழ்தமாக உண்பர்.

210. துறவியின் தூய்மையும் பெருமையும்!

முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத் தப்பிய பின்றைதம் பேரொழித்து-அப்பால் பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து) உறுமவனை எல்லா மொருங்கு. மூன்றாகப் பெயர்பெற்ற உலகமூடம், பாசண்டிமூடம், தெய்வமூடம் என்ற மூன்றனையும் ஒன்றுசேர்த்து,அமைதியான ஒரிடத்திலே அமர்ந்து ஆலோசித்து,அம் மூன்றையுமொழித்து விலக்கிய பிறகு,தம் ஆணவமாகிய பெயரினையும் விலக்கி,துறவுநிலைக்குப்பின்,பெறக்கடவதாகிய தூயோன் என்ற புகழ்ச் சொல்லையும் வெறுக்க மக்கள் பெறுவார்களேயாயின்,இவ்வுலகத்திலே அவ்விதம் பெற்ற அப்பெரியோனை, எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்

இன்தமிழ் குறளோவியம்!

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.குறள்:368 ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு – ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை. 199 இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, குதிரையின் பிடரி மயிர்போல் கற்றையான பூவானது, நறுமணத்தை இழந்ததுபோல, ஒருவனிடம் தன்பெயரை நிலைநாட்டும் பெருமுயற்சி இல்லாதபோது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாகும்?

209. அழியாப்பேற்றினை யடைவோர் கருதவேண்டியன!

உட்கப் படுமெழுத்(து) ஓரிரண் டாவதே நட்கப் படுமெழுத்தும் அத்துணையே-ஒட்டி இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப விழுச்சார்வு வேண்டு பவர்க்கு. ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்றுறையையுடையவனே!,அழியா நிலையையடைய விரும்புவோரால் அஞ்சத் தகுவது, இரண்டெழுத்துக்களாலாகிய வினையே;விரும்பத்தகுவதும் அவ்விரண்டெழுத்துக்களாலாகிய வீடே ஆகும்;நட்பாகக்கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.

நாலடியார் கூறும் நன்னெறி!

ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும் மானம் தலைவருவ செய்யவோ? – யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை அவர். 198 யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கிப் புண்படுத்தவல்ல கூர்மையான நகங்களையும், வலிமையான கால்களையும் உடைய சிங்கத்தைப் போன்ற வலிமையுடையோர், வறுமையுற்று நிலைதாழ்ந்த போதும் மானம் கெடத்தக்க செயலைச் செய்வரோ? செய்யார்.

208. மறுபிறப்பினை ஒழிக்க வழி!

பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-சிறியன நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது பேர்த்திண்டு வாரா நெறி. இரப்போர்க்கு அரிய பொருள்களைக் கொடு;இனிய சொற்களை பேசு;ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் நிலை தளராதே;அற்ப இன்பங்களை கருதாதே;அற்பர்களது அவையை சேராதே.இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.